உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது.
பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதன் முக்கிய விஷேசம் இந்த சோள ஸ்டார்ச் மூலம் உருவாக்கப்படும் கார் பாடி தீப்பிடிக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னோடி தொழில்நுட்பத்தை கிராஷ் டெஸ்ட் செய்த பிறகு வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் வல்லுனர்கள் இணைந்து இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
இலகு எடை, அதிக உறுதி கொண்ட கார்பன் ஃபைபர் விலை அதிகம் என்பதால் கோடீஸ்வர கார்கள் மட்டுமே தற்போது கார்பன் ஃபைபரில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து உருவாக்கப்படும் தீப்பிடிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய பொருள் கண்டிப்பாக கார்பன் ஃபைபரை விட பன்மடங்கு குறைவான விலையில் இருக்கும் என்பதால் அதிக வரவேற்பை பெறும் என்று ஆட்டோத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வரும் நானோ காருக்கு இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.
0 comments:
Post a Comment