Friday, July 13, 2012

மதுரையில் இன்று முதல், "ஏர் இந்தியா' சேவை : கொச்சி வழியாக வெளிநாடுகளுக்கு பறக்கலாம்

மதுரை : மதுரை - கொச்சி இடையே, விமான சேவையை, "ஏர் இந்தியா' இன்று முதல் தொடங்குகிறது. மதுரை டிராவல் கிளப் தலைவர் முஸ்தபா கூறியதாவது: மதுரை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான சேவை தொடங்கவில்லை. "கஸ்டம்ஸ்' ஒப்புதல் கிடைத்த நிலையில், "இமிகிரேஷன்' ஒப்புதல் தாமதமாகி வருகிறது. டிராவல் கிளப் சார்பில், கடந்த ஆண்டு, மலேசியா நிறுவனத்திடம் பேச்சு நடத்தினோம். அவர்களும் பார்வையிட்டு சென்றனர். 

ஆனால், 150 கி.மீ.,ல், திருச்சி சர்வதேச விமான நிலையம் இருப்பதால், வர்த்தகம் பாதிக்கும் என கருதினர். கடந்த டிசம்பரில், மதுரையில் நடந்த கூட்டத்தில், ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. மதுரையை மையமாக வைத்து, ஒன்பது மாவட்டங்கள் பயன்பெறும் கோரிக்கையை முன்வைத்தோம். மதுரையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதன்மை அதிகாரி பங்கேற்ற கூட்டத்தில், இதற்கு பலன் கிடைத்தது. மதுரை - கொழும்பு விமான சேவைக்கு, "மிகின் லங்கா' முன்வந்துள்ளது. அந்நாட்டு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்திய அரசின் அனுமதி பரிசீலனையில் உள்ளது. நவம்பரில், "வின்டர்' சேவையாக, "மிகின் லங்கா' பயணத்தை தொடங்கும். இதற்கிடையில், மதுரை - கொச்சின் விமான சேவைக்கு, ஏர் இந்தியா முன்வந்துள்ளது.

இன்று முதல், திங்கள், புதன், வெள்ளியில், விமான சேவை இருக்கும். கொச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்கு (எண் ஏ.ஐ., 9503), மதுரையிலிருந்து 4.15 மணிக்கு (எண் ஏ.ஐ., 9504) புறப்படும். இது ஒரு, ஏ.டி.ஆர்., ரக விமானம். இதில், 48 பேர் பயணிக்கலாம். இந்த விமானத்தில் சென்று, கொச்சியில் இருந்து ஜெட் ஏர்வேஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், குவைத் ஏர்வேஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, கல்ப் ஏர், டைகர் ஏர்வேஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களில், வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம். அறிமுக சலுகையாக, ஆக., 31 வரை, 1,387 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னாள் தலைவர்கள் வாசுதேவன், ஸ்ரீராம் உடனிருந்தனர். தயாராகுது "ஹெலி பேட்' : மதுரையிலிருந்து, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், காரைக்குடிக்கு, "ஹெலிகாப்டர் சேவை' வழங்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில், "ஹெலி பேட்' அமைக்க உள்ளனர். மதுரை நகரை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதியும், அதில் இருக்கும்.

0 comments:

Post a Comment