அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கூறப்படும் ஹிக்ஸ் போஸான் எனப்படும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான சமிக்ஞைகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள சேர்ண் ஆய்வு கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில மாதங்கள் மேலதிக ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நுண்துகள்களை சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பாரிய வேகத்தில் முடுக்கி விட்டு அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வில் இதற்கான முடிவை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
பேரண்டத்தில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு புலத்தில், அணுவுக்கு நிறை, அதாவது பொருண்மை உள்ளது என்ற கொள்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னராகவே பிரேரித்த பிரிட்டிஷ் பௌதீகவியலாளரான பீட்டர் ஹிக்ஸ் அவர்களின் பெயர் இந்தத் நுண்துகள்களுக்கு இடப்பட்டிருக்கிறது.
இதுவரை காலமும் ஏட்டளவிலான கருத்தாக மாத்திரமே இருந்து வந்த இந்த கொள்கையை விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கக்கூடிய இன்றைய முடிவுகள் விஞ்ஞானத்துறையில், அதிலும் குறிப்பாக இயற்பியல் துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் கேனடாவில் இருக்கும் பெரிமீட்டர் இன்ஸ்டிடியூட் ஆப் தியரிடிகல் பிசிக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு விஞ்ஞானியாகவும் சென்னையிலுள்ள கணித விஞ்ஞானக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானியுமான பாஸ்கரன் அவர்கள்.
0 comments:
Post a Comment